May 5, 2026 - 10:09 PM -
0
புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் காணியொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையின் போது, தோட்டாக்கள், சிறுத்தை ஒன்றின் தோல் மற்றும் புள்ளிமான் தோல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கருவலகஸ்வெவ, ரிடிகல, குருநாகல் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது, குறித்த காணியிலிருந்து 09 தோட்டாக்களும், கடும் பாதுகாக்கப்பட்ட விலங்கான சிறுத்தையின் தோலினால் முழுமையாகச் செய்யப்பட்ட உருவம் ஒன்றும், புள்ளிமான் தோல் ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
சோதனை இடம்பெற்ற போது, குறித்த காணியைப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்று விவசாயம் செய்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் இந்தக் காணியை விவசாய நடவடிக்கைகளுக்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கைதானவர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உருவமானது சுமார் ஆறு அடி நீளமான ஒரு பெரிய சிறுத்தையினுடையது என்றும், இவ்வளவு பெரிய சிறுத்தைகளை வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சூழவுள்ள காப்பகங்களில் மட்டுமே காண முடியும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தளம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் எரந்த கமகே, குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் சாந்த வீரசிங்க, அனுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. யூ. ஏ. சந்திரரத்ன ஆகியோரின் ஆலோசனையின் கீழ், ரிடிகல வனவிலங்கு அதிகாரி டி. ராமசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
