May 20, 2026 - 01:45 PM -
0
கட்டமைக்கப்பட்ட அடிப்படையில் போக்குவரத்து வாகனங்களுக்கான கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை மேம்படுத்தி, தனது பரந்த நிலைபேற்றியல் வங்கிச்சேவை நிகழ்ச்சிநிரலை முன்னேற்றுவதில் வங்கியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் Hayleys Mobility Limited உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை SDB வங்கி ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வாகனங்களுக்கு குத்தகைத் தீர்வுகளை நாடுகின்ற வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக பிரசித்தி பெற்ற இந்த நிறுவனங்கள் இரண்டும் தமக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளன. போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான குத்தகைத் தீர்வுகள் மீது விசேட கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யூனியன் பிளேஸிலுள்ள Hayleys Mobility அலுவலகத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். SDB வங்கியின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன, பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான மனோஜ் அக்மீமன, பிரதம வணிக அதிகாரியான சித்ரால் டி சில்வா, குத்தகைத் துறையின் தலைமை அதிகாரி லஹிரு எக்கநாயக்க மற்றும் வணிக வங்கிச்சேவைக்கான பிரதம முகாமையாளர் தரங்க டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். Hayleys Mobility Limited நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஹசித் பிரேமதிலக, பணிப்பாளரான றொஷானி தர்மரத்ன, நிதித்துறை பொது முகாமையாளரான திரு. பந்துக ரத்நாயக்க, மற்றும் உதவிப் பொது முகாமையாளரான திரு. சுராஜ் சூலரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இலங்கை எங்கிலும் தனியார் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த குத்தகைத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை விரிவுபடுத்தும் வகையில் இந்த கூட்டாண்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சூழலுக்கு தீங்கற்ற மற்றும் பொறுப்புணர்வுமிக்க போக்குவரத்துத் தெரிவுகளுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் ஆர்வத்திற்கு தேவையான பதில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான குத்தகைத் தீர்வுகள் மீது விசேட கவனம் செலுத்தப்படுகின்றமை வாடிக்கையாளர்கள் மத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற தெரிவுகளை இனங்கண்டு அதற்கேற்றவாறு செயற்படுவதில் SDB வங்கி கவனம் செலுத்தியுள்ளமையைப் பிரதிபலிக்கின்றது. மேலும், அனைவருக்கும் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குவதனூடாக நிலைபேற்றியல் மிக்க போக்குவரத்துத் தெரிவுகளுக்கு உதவுவதிலும் அது கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகின்றது.
வழக்கமான தனிப்பட்ட வாகனக் கடனுக்கு உதவுவதற்குப் புறம்பாக, ஒரே திட்டத்தின் கீழ் வாகனத் தெரிவையும், கடன் வசதியையும் ஒன்றாகப் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுப் பயனடைய இந்த ஒத்துழைப்பு இடமளிக்கின்றது. SDB வங்கி மற்றும் Hayleys Mobility ஆகிய இரு நிறுவனங்களினதும் கூட்டு வீச்சின் மூலமாக, நம்பிக்கையான, கட்டமைக்கப்பட்ட குத்தகைத் தீர்வுகளை எதிர்பார்த்துள்ள தொழில் புரிவோர், சுய தொழில் செய்பவர்கள், வணிக உரிமையாளர்கள், மற்றும் ஏனைய தனியார் வாகன கொள்வனவாளர்கள் அடங்கலாக நாடெங்கிலும் கூடுதல் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு இதன் அணுகல் மற்றும் சௌகரியத்தை இக்கூட்டாண்மை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தையில் அதிகரித்து வருகின்ற தேவைகள் மற்றும் நாட்டின் நீண்ட கால முன்னுரிமைகளுக்கு அமைவாக, நடைமுறைக்கு ஏற்ற நிதித் தீர்வுகளை வழங்குவதில் SDB வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ளமையையும் இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் என இரு தரப்பினரும் நிலைபேற்றியலை ஊக்குவிக்கின்ற போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரிப்பது வருவதால், பிரத்தியேக குத்தகைத் தீர்வுகள் மூலமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உள்வாங்கிக் கொள்ளுவதற்கு வங்கி வழங்கும் உதவியானது நிதித் தீர்வுகளை, சூழல்ரீதியாக இன்னும் கூடுதலான அளவில் பொறுப்புமிக்க தெரிவுகளுடன் இணைப்பதில் அர்த்தம் நிறைந்த ஒரு படியாக மாறியுள்ளது.
SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன அவர்கள் இக்கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Hayleys Mobility உடனான இக்கூட்டாண்மை, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் முற்போக்கான வாகன நிதித் தீர்வுகளை பரந்தளவில் அணுகுவதற்கான முக்கியதொரு படியாகக் காணப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில், அதிலும் குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து தீர்வுகள் மீதான நாட்டம் அதிகரித்து வருவதால், கட்டமைக்கப்பட்ட குத்தகைக்கான அணுகலை வலுப்படுத்தும் அதேசமயம், நிலைபேற்றியல் மிக்க எதிர்காலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஒத்துழைப்பை நாம் காண்கிறோம். இக்கூட்டாண்மையினூடாக இலங்கை எங்கிலும் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான அளவில் மதிப்பு, சௌகரியம், மற்றும் தன்னம்பிக்கையை வழங்குவதே எமது நோக்கம்.”
Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இன்னும் சிறப்பான அளவில் நிலைபேற்றியல் மிக்க மற்றும் அணுகத்தக்க போக்குவரத்திற்கான அணுகுமுறையை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக SDB வங்கியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். புதிய எரிசக்தி வாகனங்களை ஊக்குவிக்கும் அதேசமயம், வாடிக்கையாளர்கள் நிதித் தீர்வுகளுக்கு தங்குதடையற்ற அணுகலைக் கொண்டிருப்பதை உறுதி செய்து, இலங்கையில் போக்குவரத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் இரு தரப்பும் பகிர்ந்துள்ள குறிக்கோளை இக்கூட்டாண்மை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. புத்தாக்கமான, சூழலுக்கு தீங்கற்ற தெரிவுகளையும், வலுவான நிதிக் கட்டமைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இலங்கையில் போக்குவரத்தின் எதிர்காலத்தை சிறப்பிக்கச் செய்வதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.”
இந்த சமீபத்தைய கூட்டாண்மையினூடாக, அணுகத்தக்க மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கித் தீர்வுகளை வழங்குவது மாத்திரமன்றி, நிலைபேற்றியல் மிக்க போக்குவரத்து, பொறுப்புள்ள நிதி வசதி, மற்றும் நீண்ட கால பொருளாதார மீள்திறன் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புமிக்க நிதி நிறுவனம் என்ற தனது ஸ்தானத்தை SDB வங்கி தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.
SDB வங்கி தொடர்பான விபரங்கள்:
ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.
