Aug 27, 2026 - 09:31 PM





நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த சவாலான தருணத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.























