May 23, 2026 - 01:34 PM -
0
வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கு இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இணையச் சட்டம் , எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட, வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதன் போது சிவில் வழக்குகளில் மின்னணு ஆதாரங்களின் ஏற்புத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேயரத்ன, இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பிரபாகரன் ராமச்சந்திரன் மற்றும் யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளிந்த டில்ருக் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டார்.
--

