May 28, 2026 - 06:29 PM -
0
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று 'ஐஸ் பக்கெட்டுகளை' விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், அங்கு எந்தவொரு காவலரும் பணியில் அமர்த்தப்படவில்லை எனவும் பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், இப்பகுதியில் ரயில் பாதை இருபுறமும் வளைவுகளைக் கொண்டுள்ளதால், ரயில் பாதையினுள் நுழையும் வரை இருபுறமும் வரும் ரயில்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ரயில் பாதையில் மற்றுமொரு பாரதூரமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர், இதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேசமக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

