May 28, 2026 - 07:27 PM -
0
சுகாதார சாதனங்கள் மீதான வரிகளை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தும் நோக்கில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், வைத்தியர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் உட்பட இத்துறையில் ஆர்வமுள்ள பல தரப்பினருடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவிலும், பங்களாதேஷிலும் ஆரோக்கிய துவாய் உள்ளிட்ட சுகாதார பாவனைப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
கென்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா கூட வரிகளை நீக்கியுள்ளன.
ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் இவற்றை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது.
முன்னாள் நியூஸிலாந்து பிரதமர் கூட பாடசாலை மட்டத்தில் இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். உலகின் ஏனைய நாடுகள் இந்த பாவனைப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளன.
ஆகவே நாமும் நமது நாட்டு பாடசாலை பிள்ளைகள், பெண் தொடர்பாக சிந்தித்து இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகளை சேர்த்துக் கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றன.
இவை மனித உரிமைகளாக மாறும்போது மாதவிடாய் வறுமையைப் போலவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளை காண முடியும்
நாட்டின் மக்கள்தொகையில் 52% பெண்களாகவே காணப்படுகின்றனர்.
மாதவிடாய் வறுமை பற்றி பேசும்போது இங்கு பல கோணங்கள் காணப்படுகின்றன.இது குறித்து பேச தயக்கம் காட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமற்றது என்ற கருத்துக்களும் எம்மத்தியில் காணப்பட்டாலும், இவற்றிலிருந்து விடுபட்டு நாமனைவரும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

