Jun 16, 2026 - 07:24 AM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் Gig பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை உணர்ந்து, ‘ComBank GIG+’ எனும் சிறப்பு வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது, தன்முனைப்பாளர்கள், டிஜிட்டல் தொழில்முனைவோர், சமூக ஊடக கருத்துருவாக்காளர்கள்; மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அல்லது பணிகளில் ஈடுபட்டு வெளிநாட்டு நாணயத்தில் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. PayPal-இன் மூலம் பெறப்படும் பணப்பரிமாற்றங்கள் உட்பட, அவர்களின் வெளிநாட்டு வருமானங்களை ஒழுங்கமைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் பெறுவதற்கும் இது உதவுகிறது.
ComBank GIG+ என்பது நாட்டின் வேலைவாய்ப்பு சூழலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. உலகளாவிய டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைதூர வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்தி, அதிகரித்து வரும் பல தொழில்முறை நிபுணர்கள் சுயாதீனமான வருமான வழிகளை உருவாக்கி வருகின்றனர். Fiverr,Upwork மற்றும் Freelancer.com போன்ற தளங்களில் சேவைகளை வழங்கும் தன்முனைப்பாளர்களிலிருந்து, YouTube,TikTok,Meta மற்றும் X போன்ற சமூக ஊடக தளங்களில் தமது பார்வையாளர் வட்டத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators) வரை, இந்தப் பிரிவு வெளிநாட்டு நாணய வருவாயை நாட்டிற்குக் கொண்டுவரும் முக்கியமான மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
ComBank GIG+ என்பது இந்த டிஜிட்டல் வருமானம் ஈட்டும் நபர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாய் (LKR) கணக்குகளுடன், USD,EURO,GBP மற்றும் AUD போன்ற முக்கிய வெளிநாட்டு நாணயங்களில் கணக்கு திறக்கும் வசதியையும் வழங்குகிறது. இந்தக் கணக்கினை, இலங்கையில் வசிக்கும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் மற்றும் முறையாகப் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்த முடியும். எனினும், அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் தொலைதூர வேலை வாய்ப்புகள் மூலம் வெளிநாட்டு நாணய வருமானம் பெறப்படுவதை உறுதிப்படுத்தும் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்தத் துறைக்கான வங்கிச் சேவைகளை முறையாக்குவதன் மூலம், தன்முனைப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்முறை வல்லுநர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்தை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வருமான ஓட்டமாக மாற்றிக்கொள்ள வங்கிக்கு வாய்ப்பு வழங்குகிறது. மேலும், இந்தக் கணக்கு பரந்த அளவிலான நிதிச் சேவைகளுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு நாணய வருமானம் மற்றும் கடந்தகால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் சேமிப்பு, கடன் மற்றும் முதலீட்டு தீர்வுகளைப் பெற முடியும்.
ComBank GIG+ அறிமுகம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. ஹஸ்ரத் முனசிங்க தெரிவிக்கையில்:
சுயாதீனமாக டிஜிட்டல் வழிகளில் வருமானம் ஈட்டும் நபர்களின் வளர்ச்சியானது, இலங்கையில் பெறுமதி எவ்வாறு உருவாக்கப்பட்டு உலகிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ComBank GIG+ மூலம், இந்தப் பிரிவை வெறுமனே அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை முறையான நிதிமுறைமையுடன் மேலும் அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைக்கும் ஒரு வங்கிச் சூழலை நாம் உருவாக்கி வருகிறோம். இதன் மூலம், பாரம்பரிய வேலைவாய்ப்பு மாதிரிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்கள், சரிபார்க்கக்கூடிய நிதி வரலாற்றைப் பதிவு செய்யவும், முறையான நிதிச் சேவைகளை அணுகவும், தங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்தவும், மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான மற்றும் வெளிப்படையான பங்களிப்பை வழங்கவும் முடியும் எனக் கூறினார்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 எனக் கூறினார். பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்- நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
