Aug 11, 2026 - 09:46 AM

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 570க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாகும் என்பதுடன், தற்போது நாட்டிற்குள் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டராகப் பதிவான இந்நிலநடுக்கம், சொகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பெரெய்ரா, மெனிசாலேஸ், குவிப்டோ, ஆர்மேனியா, கார்ட்டாகோ மற்றும் புவனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் டச்சிரா மாநிலம், பரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.













