Aug 13, 2026 - 02:21 PM

அமெரிக்கக் கொள்கலன் வழியிலான சோயாபீன் தீனிக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாக 2025 இல் திகழ்ந்த இலங்கையின் கோழி இறைச்சி பண்ணைத் துறை, அண்மையில் சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதிக்கான சபையின் (USSEC) Soy Connext 2026 நிகழ்வில், நாட்டின் முன்னணி கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தீவன ஆலை உரிமையாளர்கள் சிலருக்கு “Sustainable U.S. Soy” மற்றும் “Fed with Sustainable U.S. Soy” லேபிள்களைப் பயன்படுத்தியமைக்காக சர்வதேச நிலைபேறாண்மை முன்னோடி விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
Soy Connext மாநாட்டின் வரலாற்றுச் சாதனையாக 800க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பிரத்தியேக நிலையான அபிவிருத்தி தொடர்பான அமர்வின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமெரிக்க பிராந்தியம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வெற்றியாளர்களுடன் இலங்கையின் கோழியிறைச்சிப் பண்ணைத் துறை முன்னோடிகளும் இணைந்து கௌரவிக்கப்பட்டமை, இவ்விழாவில் தென்னாசியப் பிராந்தியத்தின் வலுவான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின் சோயா துறை தொடர்பான செய்தியாடல்களில் USSEC உடன் நெருக்கமாகப் பணியாற்றிய கொழும்பை தளமாகக் கொண்ட Mark and Comm எனும் PR மற்றும் தொடர்பாடல் நிறுவனம், ஊடகப் பிரதிநிதியாக இம்மாநாட்டில் கலந்துகொண்டு இந்த அங்கீகார நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்றிருந்தது.
ஆகஸ்ட் 5 முதல் 7 வரை Hyatt Regency Chicago ஹோட்டலில் நடைபெற்ற இந்த மூன்று நாள் மாநாடு, சர்வதேசக் கொள்வனவாளர்களை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுடன் நேரடியாக இணைக்கும் “Trade Team Invitational” எனும் தனிப்பட்ட சந்திப்புகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தை இயங்கியல், நிலையான அபிவிருத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறன் ஆகிய தலைப்புகள் குறித்த முக்கிய உரைகள் மற்றும் இடைவேளை அமர்வுகளை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சி நிரலுடன் இம்மாநாடு இடம்பெற்றது.
தென்னாசியா உள்ளிட்ட, உணவில் புரதச் சத்தை அதிகளவில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ள பிராந்தியங்களின் தலா வருமானப் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியினால் உந்தப்பட்டு, சோயாவுக்கான உலகளாவிய இறக்குமதித் தேவைகளின் அளவு தற்போதுள்ள 247 மில்லியன் மெட்ரிக் தொன்னிலிருந்து 2034 ஆம் ஆண்டளவில் 319 மில்லியன் மெட்ரிக் தொன்னாக உயரும் என சுயாதீனக் கணிப்பாளர்கள் முன்கணித்துள்ளனர். இந்த அம்சத்தை ஒரு நீண்டகால வளர்ச்சிக் கட்டத்தின் பகுதியாக முன்னிறுத்தி USSEC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிம் சட்டர் இம்மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இது சுருங்கிவரும் சந்தை அல்ல, மாறாக விரிவடைந்து செல்லும் சந்தை என்று மாநாட்டில் உரையாற்றிய சுட்டர், அதை முன்னின்று வழிநடத்த அமெரிக்க சோயா தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்தத் தேவைக் கதையானது பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. அமெரிக்க சோயா நிலையான அபிவிருத்தி உறுதிப்பாட்டுத் நெறிமுறையின் (SSAP) கீழ் சரிபார்க்கப்பட்டு, “Sustainable U.S. Soy” மற்றும் “Fed with Sustainable U.S. Soy” லேபிள்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரங்களை இலங்கையின் 16 கோழியின உற்பத்தியாளர்கள் மற்றும் தீவன ஆலை உரிமையாளர்கள் தற்பொழுது கொண்டுள்ளனர். இது ஆசிய பிராந்தியத்தில் இந்த லேபிள்களைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கையை உறுதியாக உயர்த்தியுள்ளது. New Anthoney's Farms நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற தென்னாசியப் பிராந்தியத்தின் முதல் நிறுவனமாகத் திகழ்ந்ததுடன், அன்றிலிருந்து நடைமுறையிலான நிலையான கொள்முதல் எவ்வாறு அமையும் என்பது குறித்து USSEC குறிப்பிடுகையில், ஒரு முன்மாதிரி வழிகாட்டியாகவும் இந்நிறுவனம் விளங்கி வருகின்றது.
சுற்றாடல் நிலைபேறாண்மையும், இலாபத்தன்மையும் ஒன்றோடொன்று மோதும் இலக்குகள் அல்ல என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில், இம்மாநாட்டின் நிலைபேறாண்மை தொடர்பான குழு விவாதங்களில் இலங்கை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். நிலைபேறான கொள்முதல் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், பருவநிலை நடவடிக்கை, உயர்தர ஊட்டச்சத்து மற்றும் புரதம் நிறைந்த தீவனக் கொள்முதல் ஆகியவற்றிற்கான தங்களது அர்ப்பணிப்பை நுகர்வோருக்கு நேரடியாக வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக Sustainable U.S. Soy இலச்சினை எவ்வாறு திகழ்கிறது என்பது குறித்தும் உற்பத்தியாளர்கள் இங்கு கருத்துப் பகிர்ந்துகொண்டனர்.
இலங்கைக்கும் USSEC இற்கும் இடையிலான நிறுவன ரீதியிலான உறவுகள் விரைவாக வலுவடைந்து வந்த ஒரு ஆண்டின் தொடர்ச்சியாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த மே மாதம், இலங்கை விலங்கு ஊட்டச்சத்துச் சங்கம், USSEC உடன் இணைந்து கண்டியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இது நாட்டின் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கும் தீவன விஞ்ஞானிகளுக்கும் முதலாவது பிரத்தியேக தொழில்முறை அமைப்பாக அமைந்தது. உலகில் அமெரிக்க சோயாபீன் தீவனக் கொள்கலன்கள் வழியில் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடாக இலங்கை தொடர்ந்து திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில் சுமார் 255,000 தொன்களை இறக்குமதி செய்துள்ள இலங்கை, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மெட்ரிக் தொன்களை உற்பத்தி செய்யும் நாட்டின் விலங்குத் தீவனத் தொழில்துறைக்கு மூலப்பொருட்களை வழங்குகிறது. இத்தீவனத் தொழில்துறையின் மிகப்பெரிய வாடிக்கையாளராக கோழியிறைச்சிப் பண்ணைத் துறை விளங்குகின்றது.
“Soy Connext 2026” மாநாடு நிறைவடையும் வேளையில், இலங்கை தூதுக்குழுவினர் வெறும் ஒரு வர்த்தக உறவுடன் மட்டும் நாடு திரும்பவில்லை எனவும், மாறாக சர்வதேச அரங்கில் தெளிவாகப் புலப்படும் வகையிலான ஒரு நிலையான அபிவிருத்திப் பங்காண்மையை கட்டியெழுப்பி திரும்புகின்றனர் எனவும் USSEC அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.





















