Aug 17, 2026 - 11:53 PM



22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள பின்னணியில், அது தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் 1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நீதித்துறை ஒழுங்கமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு ஆரம்பம் முதலே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
குறித்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

























