Aug 18, 2026 - 03:55 PM





நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இன்று (18) பல தகவல்களை வெளியிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர், அதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் பலனாக இந்த 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

























