Aug 24, 2026 - 07:54 AM





திட்டமிட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























