Aug 24, 2026 - 10:20 PM





நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) நுவரெலியா பொலிஸாரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மேல் ஏரி வீதி மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பில் ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்த போது, கம்பிகளிலிருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், 344 அடி செப்பு அல்லாத கம்பிகள், செப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருந்த இறப்பர் உறைகளின் தொகுதி மற்றும் கம்பிகளை அறுப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கந்தப்பளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய இருவராவர்.
கைப்பற்றப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை கணப்பிடப்படவில்லை என்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவற்றின் பெறுமதியைக் கணப்பிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் இன்று (24) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























