Aug 27, 2026 - 11:05 AM





தோனி - சிஎஸ்கே அணி நிர்வாகம் இடையிலான உறவு சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணியின் பங்குகளை, மகேந்திர சிங் தோனி கேட்ட நிலையில், குறைந்த அளவே தருவதற்கு அணி நிர்வாகம் முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடங்கப்பட்ட நாள் முதல் அதவாது 2008 ஆம் ஆண்டு முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடி வருகிறார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது சென்னை அணி, தோனியை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. எனினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை.
இச்சூழலில் வரும் ஆண்டிலும் அவர் ஒரு வீரராக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பங்குகளில் 25 சதவிகிதத்தை தருமாறு தோனி கேட்ட நிலையில், அணி நிர்வாகம் 3 சதவிகிதம் மட்டுமே தர முன்வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாக குறைத்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் 4 சதவிகிதமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் தோனி 18 சதவிகிதம் கேட்ட நிலையில், அணி நிர்வாகம் 5.5 சதவிகிதம் தர முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.























