Aug 27, 2026 - 11:28 AM





இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூபருமான 32 வயதான அங்கித் பால்யான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (26) மாலை ஷாம்லி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திலிருந்து அங்கித் பால்யான் தனது காரை நோக்கி வெளியே வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கித்தை இலக்கு வைத்து சுமார் 18 முதல் 20 சுற்றுகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஷாம்லி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தலைமையிலான பொலிஸார், அங்கித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, இக்கொலையைக் கண்டித்து அங்கித்தின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் டெல்லி - முசாபர்நகர் வீதியில் உடலை வைத்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
கொலை செய்யப்பட்ட அங்கித் பால்யான் யூடியூபில் 3.6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு புகழ்பெற்றவராக இருந்தார். வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த கொலையின் பின்னணியில் அரசியல் பகை அல்லது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஹரியானாவின் பிரபல தாதா கும்பல் ஒன்று இக்கொலைக்கு பொறுப்பேற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதையும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.























