Sep 3, 2026 - 12:09 PM

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
அன்றையதினம் காலை பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ, திம்பிரிகஸ்யாயவில், தாம் வசித்து வந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று (02) காலை தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
இதற்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையில், வீட்டின் கதவு ஒன்றின் அருகே அவரது சடலம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த வீட்டில் அவர் ஊழியர் ஒருவருடன் வசித்து வந்துள்ளதுடன், அந்த ஊழியர் சில நாட்களுக்கு முன்னர் வேலை ஒன்றின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
எராஜ் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கனடாவில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அவர் கடும் கடன் சுமையால் அவதியுற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீதவானின் விசாரணைகள் நேற்று பிற்பகல் சம்பவ இடத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா மற்றும் கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார ஆகியோரின் வழிகாட்டலில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட சம்பவத்தின் பின்னரே எராஜ் பெர்னாண்டோ தொடர்பில் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்த வேளையில், அப்போதைய ஹம்பாந்தோட்டை மேயராக இருந்த எராஜ் பெர்னாண்டோ அச்சுறுத்தியிருந்ததுடன், தனது கையில் இருந்தது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி எனவும் அவர் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



























