Sep 3, 2026 - 12:22 PM

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். பின்னர், மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
ஆனால் அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டதாகவும், ஆறு வாக்கு சாவடிகளில் விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரானைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7 ஆம் திகதியே விண்ணப்பித்ததாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திமுக தலைவர் ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



























