Sep 7, 2026 - 11:21 PM

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டுமே பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல என்றும், இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (06) கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘கம்பஹா இலக்கிய விழாவில்’ (GAMLIT 26) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட பண்பாடான மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ ஏற்படாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலக்கிய விழா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கலை, இலக்கியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியின் காட்சிக் கூடங்களைப் பார்வையிடுவதில் பிரதமர் விசேட ஆர்வம் காட்டினார்.
இதன்போது, அத்துறைகளில் காணப்படும் புதிய போக்குகள் தொடர்பாக மாணவர்கள் முன்வைத்த விளக்கங்களைக் கேட்டறிந்ததுடன், அவர்களுடன் நட்புறவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். அத்துடன், மாணவர்களின் திறமைகளையும் அதற்காக அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
பின்னர், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், கண்காட்சியில் பங்கேற்ற பாடசாலைகளுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இலக்கிய விழாவில் உரையாற்றிய பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு மாநகர சபையினால் இவ்வாறான இலக்கிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்படுவது முழு நாட்டிற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த விழாவின் ‘பண்பாடான பிரஜையொருவரை கண்டடைதல்’ என்ற கருப்பொருள் மிகவும் காலத்திற்கேற்றதாக இருப்பதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் பண்பாடான மனிதனை உருவாக்கும் நோக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் கலாசார விழா சில நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும், இதன் பின்னணியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், பிள்ளைகளின் அர்ப்பணிப்பு, பயிற்சிகள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றின் ஊடாகவும், கலை மற்றும் இலக்கியத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் ஊடாகவும் பரிவுணர்வு கொண்ட மனிதர் ஒருவர் உருவாக்கப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக விளங்கும் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான எதிர்காலப் பாதையை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட பிரதமர், இலக்கியத்தையும் கலையையும் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதனை தேசிய மட்டத்திலான ஒரு நிகழ்ச்சித் திட்டமாக விரிவுபடுத்த முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

























