Sep 7, 2026 - 09:54 PM

தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தோனியின் வழிநடத்தலில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, 2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் வீதிக்கு கார்பட் இடுவதற்கான ஏலதாரர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் குறித்த நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பிரதிவாதி குமார ஜயகொடி பணியாற்றியதாகச் சாட்சி குறிப்பிட்டார்.
அதன்படி, கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி இந்த கார்பட் இடும் பணியை மேற்கொள்வதற்காக ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு முன்பணப் பிணையின் அடிப்படையில் ரூ. 8,859,708 முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் சாட்சி கூறினார்.
கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு என்பன உரிய கொள்முதல் நடைமுறையைச் சரியாகப் பின்பற்றியுள்ளதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே தாம் அந்தப் பணப்பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததாகச் சாட்சி சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், குறித்த நிறுவனம் கார்பட் இடும் பணியை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சாட்சி, அந்தப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தமது நிறுவன வளாகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர், குறித்த நிறுவனம் வழங்கிய முன்பணப் பிணையின் கீழ் ரூ. 2,214,921 மட்டுமே அறவிடப்பட்டதாகச் சாட்சி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் சாட்சியமளித்தார்.
அதன்பின்னர், இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

























