Sep 10, 2026 - 04:41 PM

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வெளியிட்ட கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாக முடிவு செய்து, கோட்டை நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று (10) அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, மனுதாரரான திலித் ஜயவீர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சமர்ப்பணங்களை முன்வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் சமர்ப்பித்த அரைகுறையான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட நேர்காணலின் சில பகுதிகளை மட்டும் மேற்கோள் காட்டி, மனுதாரர் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திட்டமிட்டு நீதவானிடம் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் மனுதாரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்துள்ளார் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் எதுவும் அவருக்கு இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதவானிடம் சமர்ப்பிக்கப்படாத அந்த நேர்காணலின் ஏனைய பகுதிகளைப் பரிசீலிக்கும் போது அது தெளிவாகப் புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், இந்த ரிட் மனுவையும் அன்றைய தினமே அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரொஹான்த அபேசூரிய உத்தரவிட்டார்.





























