Sep 10, 2026 - 05:52 PM

நீர் வழங்கல் சபையின் கீழ் கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்று திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
தற்போது நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அது தொடர்பான அரசின் தயார்நிலை குறித்து இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நீர் வழங்கல் சபையினால் நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் சுத்திகரிக்கப்படுவதாகவும், அதற்காகப் பல நீர் மூலங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக நாடு முழுவதிலும் உள்ள 59 நிலத்தடி நீர் மூலங்களில் இருந்து நாளொன்றுக்கு 77,000 கனமீற்றர் நீரும், 59 நீர்த்தேக்கங்களில் இருந்து சுமார் 712,000 கனமீற்றர் நீரும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, தினசரி நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான எஞ்சிய தொகையான சுமார் 22 இலட்சம் கனமீற்றர் நீர் ஆறுகள், ஓடைகள் மற்றும் ஏனைய நீர் மூலங்களில் இருந்தே பெறப்படுவதாகவும் அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.





























