Sep 10, 2026 - 06:45 PM

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னன் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் இன்று (10) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள், அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,500 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும், வைத்திய சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் வைத்திய சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் கலைமண்ணனிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது.
பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





























