Sep 12, 2026 - 07:45 PM

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய மற்றும் பல்லியா வாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் மூலம் கடந்த 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்தனர்.
இதன்போது மூன்று டிங்கி படகுகளும், 1,900 க்கும் அதிகமான கிலோகிராம் மீன் தொகையும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் மீன் தொகையை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





























