Sep 28, 2026 - 05:52 PM

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (27) கண்டியில் நடைபெற்றது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் விற்பனையாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்காக இப்புலமைப்பரிசில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு நேற்றைய தினம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
மேலும், மஹையாவ பூர்ணவத்த (மேற்கு) கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.
இங்கு 106 மாணவர்கள் புலமைப்பரிசில் மற்றும் கல்வி உதவிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, தேசத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு லொத்தர் விற்பனையாளர்கள் வழங்கும் முழுமையான பங்களிப்பைப் பாராட்டும் ஒரு வாய்ப்பாகவே இது அமைகிறது எனக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன,
2025 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியம் இந்த நாட்டு மக்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு நிதியமாக பாரிய சேவையில் ஈடுபட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை 6,115 மில்லியன் ரூபாய் ஜனாதிபதி நிதியத்தினால் இந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக 856 மில்லியன் ரூபாவும், சுயதொழில் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்காகவும், 41 மதத்தலங்களுக்கும், கலாசார பெரஹராக்களை நடத்துவதற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 206,001 பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 10,000 ரூபா வீதம் 2,060 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் மஹபொல புலமைப்பரிசில்களுக்காக மாத்திரம் 2,666 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 01 ஆம் இடம் முதல் 10 ஆம் இடம் வரை சிறந்த பேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில், 2025 ஆம் ஆண்டில் 01 ஆம் இடம் முதல் 20 ஆம் இடம் வரை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிந்தித்துப் பாருங்கள், இவ்வளவு அதிக தொகைகள் எங்கிருந்து வழங்கப்படுகிறது என்று? இந்த நிதியை வழங்குவது லொத்தர் விற்பனை செய்யும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 20,000 பேராகிய நீங்கள்தான்.
கணக்கிட்டுப் பார்த்தால், நீங்கள் ஒரு வருடத்திற்கு 30,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசாங்கத்திற்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் வழங்குகிறீர்கள்.
தேசிய லொத்தர் சபையிலிருந்து அரச பொது நிதியத்திற்கு ஆண்டுதோறும் 6,000 மில்லியன் ரூபாவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 1,500 மில்லியன் ரூபாவும், ரணவிரு நிதியம், சிறுநீரக நிதியம், சுகாதார அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் விவசாய நிதியங்களுக்கு மேலும் 600 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுகிறது.
இந்த அனைத்துப் பணத்தையும் வழங்குவது லொத்தர் விற்பனை செய்யும் 20,000 பேராகிய நீங்கள்தான். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
இராணுவம், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர்களைப் போலவே நீங்களும் தேசத்திற்கு ஒரு பாரிய சேவையைச் செய்யும் அமைதியான வீரர்கள். அதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கும் முழுமையான பங்களிப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.































