Oct 2, 2026 - 06:41 PM

இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழுவினால் அரபு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் ஏகமனதாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான 'ரா அம்' (Ra'am) மற்றும் 'ஜொயின்ட் லிஸ்ட்' (Joint List - ஹதாஷ், தால் மற்றும் பலட் ஆகிய கட்சிகளின் கூட்டணி) ஆகியவற்றை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு முன்னதாகத் தகுதி நீக்கம் செய்திருந்தது.
இந்தத் தடை உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்து வந்த நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாலஸ்தீன-இஸ்ரேலிய அரசியல்வாதியும் 'பலட்' (Balad) கட்சியின் தலைவருமான சாமி அபு ஷஹாதே (Sami Abu Shehadeh) மற்றும் அரபு-யூத 'ஹதாஷ்' (Hadash) கட்சியின் உறுப்பினரான யூத அரசியல்வாதி ஓபர் காசிஃப் (Ofer Cassif) ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.































