Oct 7, 2026 - 12:21 PM

நுவரெலியா மாநகர சபையின் கீழ் நீண்டகாலமாக நிர்வகிக்கப்பட்டு வரும் நீர் விநியோகத் துறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா மக்கள் இன்று (07) நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்து இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நுவரெலியா மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பொதுமக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாநகர சபையினால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வரும் நீர் விநியோகத் துறையின் மூலம் மாநகர சபைக்கு இதுவரை வருமானம் கிடைத்து வருவதுடன், பொதுமக்களுக்கும் ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நீர் விநியோகத் துறை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாற்றப்பட்ட பின்னர் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் குறித்தும், மாநகர சபைக்கு தற்போது கிடைத்து வரும் வருமானம் இழக்கப்படுவது குறித்தும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
தாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் மாத்திரம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், தமக்கும் நுவரெலியா நகர மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியதாக கருதப்படும் விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நீர் விநியோகத் துறை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாற்றப்பட்ட பின்னர் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும், அவ்வாறு கட்டணங்கள் அதிகரித்தால் அது சாதாரண மக்களுக்கு நேரடியான பொருளாதார சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்படி, நீர் விநியோகத் துறையை மாநகர சபையிலிருந்து அகற்றுவது நீர் விநியோக சேவையின் நிர்வாகப் பொறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.































