Oct 7, 2026 - 12:26 PM

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய, நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 13 முதல் 20 வரை ஏழு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்கள் நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதன் மூலம் 2027 வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற நடவடிக்கை நிறைவடையும்.
வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரச விடுமுறை நாட்களைத் தவிர சனிக்கிழமைகளிலும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது ஆளும்கட்சிக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் விவாத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குழு நிலை விவாதத்தின் போது அது ஆளும்கட்சிக்கு 40 சதவீதமாகவும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.































