Oct 8, 2026 - 03:05 PM

செலான் வங்கி பிஎல்சியினது மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 1 டிரில்லியனைத் தாண்டியுள்ளதன் மூலம் வங்கி தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2026 செப்டெம்பர் மாதத்தில் இந்த மைல்கல்லை எட்டிய செலான் வங்கி, இத்தகைய சாதனையைப் பதிவு செய்த இலங்கையின் நான்காவது தனியார் துறை வங்கியாகவும் திகழ்கிறது.
மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 1 டிரில்லியனைத் தாண்டியுள்ளமை, வங்கியின் நிதி வலிமை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் அன்றாட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வங்கி தொடர்ந்து ஆற்றி வரும் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இச் சாதனை, கடந்த சில ஆண்டுகளில் வங்கி அடைந்துள்ள முன்னேற்றத்தையும், வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, “மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 1 டிரில்லியனைத் தாண்டியுள்ளமை செலான் வங்கிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இச் சாதனை, எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக மதிப்பை வழங்குவதில் அவர்கள் கொண்டுள்ள கவனத்தையும் பிரதிபலிக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எமது அணுகுமுறையே எமது செயற்பாடுகளின் அடிப்படையாக உள்ளது. செலான் வங்கியின் மீது எமது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். இந்த மைல்கல்லைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது வளர்ச்சியை மேலும் கட்டியெழுப்புவதிலும், வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் மதிப்பை மேலும் வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.” என்றார்.
இச் சாதனை, செலான் வங்கியின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கும் அதேவேளை வங்கியின் விரிவடைந்து வரும் செயற்பாட்டு அளவையும், அதன் முன்னேற்றத்திற்கு ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வழங்கி வரும் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
ரூ. 1 டிரில்லியன் மைல்கல்லை எட்டியுள்ள செலான் வங்கி, 2026 ஆம் ஆண்டுக்கான Euromoney Awards for Excellence விருதுகளிலும் அண்மையில் இரண்டு முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. இதில், இலங்கையின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கியாகவும் (Sri Lanka’s Best Bank for Customer Experience), இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான (SMEs) சிறந்த வங்கியாகவும் செலான் வங்கி அங்கீகரிக்கப்பட்டது. வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி என்ற விருதை முதன்முறையாக 2025 ஆம் ஆண்டில் பெற்ற செலான் வங்கி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த அங்கீகாரத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டை அங்கீகாரம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் தடையற்றதும் எளிதில் அணுகக்கூடியதுமான வங்கி அனுபவங்களை உருவாக்குதல் மற்றும் SME தமது வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் சிறப்பு நிதி மற்றும் நிதிசாரா ஆதரவை வழங்குதல் என்னும் செலான் வங்கியின் மூலோபாயத்தில் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கிறது.































