Oct 15, 2026 - 03:58 PM
By மன்னார் நிருபர் லெம்பட்
By மன்னார் நிருபர் லெம்பட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான அன்ரன் ஜெயக்கொடி, உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டி வைத்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாவுக்கான கட்டிட கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான 600 மில்லியன் ரூபா வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று குழந்தை நலப் பிரிவுக்காக 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும், வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































