Nov 8, 2026 - 07:54 PM

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, கடந்த 12 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி காலி மாவட்டத்தின் ஹிநிதும பகுதியில் பதிவாகியுள்ளது.
அங்கு 211 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மானன்கட்டிய, உடவலவ மற்றும் பந்தகிரிய நீர்த்தேக்கங்களின் தலா 4 வான் கதவுகளும், அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ராஜாங்கனை, அங்கமுவ, அம, யோதவெவ, மவுஆர ஆகிய நீர்த்தேக்கங்களின் தலா இரண்டு வான் கதவுகளும், கெனியன், குகுலே கங்கை நீர்த்தேக்கங்களின் தலா ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக மலையக வீதி வழியிலான ரயில் போக்குவரத்தில் ரம்புக்கனையிலிருந்து கண்டி மற்றும் நானுஓயா வரையிலான ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்றும், ரம்புக்கனையிலிருந்து மாத்தளை வரையிலும் ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்றும் இலங்கைத் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பல மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
பதுளை மாவட்டம்: மீகஹகியுல
காலி: தவலம, நாகொடை
கண்டி: தும்பனே, மினிபே
கேகாலை: அரநாயக்க, மாவனல்ல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, வரகாப்பொல
மாத்தறை: பஸ்கொட
மொனராகலை: வெல்லவாய
நுவரெலியா: கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, மதுரட்ட, ஹங்குரங்கெத்த
இரத்தினபுரி: கொலன்ன, வெலிகேபொல, கொடகவெல, பலாங்கொடை
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
கண்டி: உடுதும்பர
மாத்தறை: கொட்டபொல
நுவரெலியா: நில்தண்டாஹின்ன, வலப்பனை
மேலும், மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்தும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அடுத்த 3 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
































