Nov 8, 2026 - 08:17 PM

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள 'கலேதொல' நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (07) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.
அதற்கமைய, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இன்று (08) காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், காணாமல்போயிருந்த இறுதி இளைஞரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
































