Nov 11, 2026 - 07:08 PM

JXG (ஜனசக்தி குழுமம்), இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, BREAKTHROUGH எனும் தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கை முழுவதிலும் வளர்ச்சிக்கான சிறந்த ஆற்றலைக் கொண்ட வணிக நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு ஆதரவளிப்பதுடன், தொழில்முனைவோர் சவால்களை எதிர்கொள்ளவும், தமது திறன்களை வலுப்படுத்திக்கொள்ளவும், வணிக ரீதியான ஆற்றலை முழுமையாக அடைய உதவுவதுமே இதன் நோக்கமாகும்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றமானது போட்டித்தன்மை மிக்க வணிக நிறுவனங்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், புதிய தொழில்துறைகளை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டுச் சந்தைகளுக்கு அப்பால் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் தங்கியுள்ள இன்றைய சூழலில், நாட்டின் தொழில்முனைவோரின் திறமைகளுக்கு ஆதரவளிப்பதில் தனியார் துறையின் முக்கிய பங்களிப்பாக BREAKTHROUGH திட்டம் அமைந்துள்ளது. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக வளர்ச்சியடைந்த பல வணிகங்கள் உள்ள போதிலும், பல திறமையான தொழில்முனைவோர் தமது வணிகங்களை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிதி, தொழில்சார் நிபுணத்துவம், வணிகத் தொடர்புகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
JXG இன் ஸ்தாபகரும் கௌரவத் தலைவருமான C.T.A. ஷாஃப்டர் அவர்களின் தொழில்முனைவுப் பயணமே இத்திட்டத்தை உருவாக்குவதற்கான உந்துசக்தியாக அமைந்துள்ளது. இலங்கையின் காப்புறுதித் துறையில் அவர் மேற்கொண்ட முன்னோடிப் பங்களிப்புகளும், ஏனைய பல வணிகத் துறைகளில் அவர் முன்னெடுத்த முயற்சிகளும் இக்குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன. காப்புறுதித் துறையில் தனக்கிருந்த அனுபவத்துக்கு அப்பால் வேறுபட்ட துறைகளிலும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு, கல்வி, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் கால்பதித்தார். கணக்கிடப்பட்ட இடர்களை ஏற்று, வெற்றிகரமான வணிகங்களை உருவாக்கிய அவரது பயணம், வழக்கமான வரம்புகளுக்கு அப்பால் சிந்தித்து, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றை வெற்றிகரமான வணிக முயற்சிகளாக மாற்றுவதற்கான தொழில்முனைவோரின் மனப்பாங்கை எடுத்துக்காட்டுகின்றது.
JXG இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர் கருத்துத் தெரிவிக்கையில், "எமது ஸ்தாபகரும் கௌரவத் தலைவருமான C.T.A.ஷாஃப்டர் அவர்களின் தொழில்முனைவுப் பயணம், வணிகமொன்றை உருவாக்குவதற்கு பரிச்சயமான எல்லைகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் துணிச்சலும், தைரியமான தீர்மானங்களை எடுக்கும் மனப்பக்குவமும், ஒரு எண்ணத்தை நடைமுறைச் செயற்பாடாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை எமக்குக் கற்றுத் தந்துள்ளது. காப்புறுதித் துறையில் தனது தொழில் பயணத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலத்தில், 1978 இல் கொத்மலே நிறுவனத்தை ஆரம்பித்து பால் உற்பத்தித் துறையில் கால்பதித்தமை, அவரின் இந்த மனப்பாங்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"இலங்கைத் தொழில்முனைவோர் இதுவரை எட்டியுள்ள சாதனைகளைப் பாருங்கள். Expolanka, புதிய விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தகத்துடன் ஆரம்பித்து, உலகளாவிய logistics சேவை நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. இலங்கையைச் சேர்ந்த கிறிஸ் கனகெரட்னே இணை ஸ்தாபகராக நிறுவிய Virtusa, பொஸ்டன் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கிடையே பணியாற்றிய ஒரு சிறிய குழுவிலிருந்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்தது. உள்ளூர் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி மின்சாரத்தில் இயங்கும் அதிவேக காரை உருவாக்கும் சவாலை Vega Innovations ஏற்றுக்கொண்டது. இந் நிறுவனங்கள் எவையும், இன்று நாம் அறிந்துள்ள பரிமாணத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. வழமையான எல்லைகளுக்கு அப்பால் சிந்தித்து, இடர்களை ஏற்று, சவாலானவை எனப் பலரும் கருதிய வாய்ப்புகளை நோக்கி அவர்கள் பயணிக்கத் தயாராக இருந்தமையே இந்த வணிகங்களின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.”
"இலங்கைத் தொழில்முனைவோரும் இவ்வாறான முன்னேற்றங்களை அடைவதற்கான அதிகளவு வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். நாடெங்கிலும் வளர்ச்சியடையவும், புத்தாக்கங்களை முன்னெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் ஆற்றல் கொண்ட பல வணிகங்கள் உள்ளன. எனினும், அவற்றில் பல தமது தற்போதைய நிலையைத் தாண்டி வளர்ச்சியடைவதற்குத் தேவையான நிதி, தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் அனுபவமிக்கவர்களின் வழிகாட்டல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. BREAKTHROUGH திட்டத்தின் ஊடாக, இத் தேசிய நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் JXG தனது வணிக அனுபவத்தையும் தொழில்சார் திறன்களையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, வளர்ச்சிக்கான சிறந்த ஆற்றலைக் கொண்ட தொழில்முனைவோர் தமது வணிகங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் தேவையான வளங்களையும் வழிகாட்டலையும் வழங்க நாம் விரும்புகின்றோம். இலங்கையில் உருவாகும் மேலும் பல வணிகங்கள் குறிப்பிடத்தக்க நிறுவனங்களாக வளர்ச்சியடைந்து, தமக்கும் நாட்டிற்கும் மதிப்பை உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ‘Breaking Barriers, Forging Futures’ என்ற எமது நோக்கத்தை நடைமுறைப்படுத்தும் பாதை இதுவாகும்." என்றார்.
BREAKTHROUGH திட்டமானது, JXG இன் வணிகங்களை உருவாக்கி நிர்வகித்த அனுபவத்தையும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் விரிவான வணிகத் தொடர்புகள் மற்றும் நிறுவன ரீதியான அணுகுமுறையையும் ஒன்றிணைக்கின்றது. மேலும், இலங்கை வர்த்தக சம்மேளனமானது இத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும், இத்தேசிய முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் தங்களது நிபுணத்துவம், வளங்கள் மற்றும் வணிகத் தொடர்புகள் ஊடாக பங்களிக்குமாறு துறைசார் பங்காளர்களை வரவேற்கிறது.
இத்திட்டம் ஆனது, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (MSMEs) உள்ளடங்களாக ஏற்கனவே இயங்கி வரும் வணிகங்கள் மற்றும் ஆரம்பநிலை வணிகங்கள் (Start-ups) என இரு பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை ஏற்கும். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இயங்கும் வணிகங்கள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையனவாகும். தெரிவுச் செயன்முறையின் ஒரு பகுதியாக, முதலில் மாகாண மட்டத்திலான மதிப்பீடுகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், வழிகாட்டல் அமர்வுகள் மற்றும் வணிக அபிவிருத்தி அமர்வுகள் நடத்தப்படும். இறுதித் தெரிவுகள், இத்திட்டத்திற்காக நியமிக்கப்படும் நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்படும். இத்தெரிவுகள், வணிகத்தின் சாத்தியத்தன்மை, புத்தாக்கம், விரிவாக்கத்திற்கான ஆற்றல், நிலைபேறான தன்மை, நெறிமுறை சார்ந்த நடைமுறைகள் மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
தெரிவு செய்யப்படும் 20 வணிகங்களுக்கு மொத்தமாக ரூ. 70 மில்லியன் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வணிகத்திற்கும் ரூ. 1 மில்லியன் முதல் ரூ. 5 மில்லியன் வரையான நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வணிகத்தின் தேவைகள், அதன் வளர்ச்சிக் கட்டம், வளர்ச்சி இலக்குகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படும்.
நிதியுதவிக்கு மேலதிகமாக, தெரிவு செய்யப்படும் வணிகங்கள் கட்டமைக்கப்பட்ட 12 மாத கால விருதுக்கு பின்னரான அபிவிருத்தித் திட்டத்திலும் பங்கேற்கும். இதன் ஊடாக வழிகாட்டல், முதலீட்டாளர் வலையமைப்புகளுடனான தொடர்புகள், வங்கிச் சேவைகள் மற்றும் காப்புறுதி ஆதரவு, தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் காலாண்டு முன்னேற்ற மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். நிதி, மனித வளங்கள், தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் சட்ட சேவைகள் உள்ளிட்ட துறைகளில் JXG இன் சிரேஷ்ட தலைமைத்துவக் குழுவினரும் அதன் பல்வேறு வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்களும் தமது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்துகொள்வார்கள். இந்த ஆதரவு ஆனது, வணிகங்கள் தமது தொழிற்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளவும், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தீர்மானங்களை மேம்படுத்தவும், நிலைபேறான வளர்ச்சிக்குத் தயாராகவும் உதவும்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷிரான் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், "போட்டித்தன்மை மிக்க வணிகங்களை உருவாக்குவதிலும், வணிகங்கள் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பரந்த சந்தைகளை அணுகுவதற்கு வழிவகுப்பதிலுமான நமது திறனிலேயே இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பெருமளவில் தங்கியுள்ளது. நாடு முழுவதிலும் தொழில்முனைவுத் திறமைகள் காணப்படுகின்ற போதிலும், பல வணிகங்கள் தமது தற்போதைய வளர்ச்சி நிலையைத் தாண்டிச் செல்வதற்கு நிதி, தொழில்சார் நிபுணத்துவம், வழிகாட்டல் மற்றும் வணிகத் தொடர்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.”
"இத் தேசிய திட்டத்தை உருவாக்குவதற்கு முன்வந்தமைக்காகவும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் திறன்களையும் விரிவான வணிக வலையமைப்பையும் அங்கீகரித்தமைக்காகவும் JXG நிறுவனத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஒன்பது மாகாணங்களிலும் வளர்ச்சிக்கான சிறந்த ஆற்றலைக் கொண்ட வணிகங்களை அடையாளம் கண்டு, நிதியுதவி மற்றும் ஒரு வருட கால தொழில்சார் வழிகாட்டல் திட்டத்தின் ஊடாக அவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை BREAKTHROUGH திட்டம் வழங்குகின்றது. வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் போட்டித்தன்மை மிக்க இலங்கை வணிக நிறுவனங்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு இம்முயற்சி அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என நாம் நம்புகின்றோம்." என்றார்.
JXG மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவை ஒருங்கே, BREAKTHROUGH திட்டத்தின் ஊடாக, இலங்கை முழுவதிலும் உள்ள தொழில்முனைவோருக்கு தொழில்சார் வணிக ஆதரவு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை மேலும் இலகுவாகப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றன. இதன் மூலம் வளர்ச்சிக்கான சிறந்த ஆற்றலைக் கொண்ட வணிகங்கள் தமது இலட்சியங்களை நடைமுறை வணிக முன்னேற்றமாக மாற்றிக்கொள்வதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2027 ஜனவரி 20 ஆம் திகதி நிறைவடையும். தகைமை நிபந்தனைகள், விண்ணப்பத் தேவைகள், தெரிவுச் செயன்முறை மற்றும் திட்டத்தின் கால அட்டவணை தொடர்பான மேலதிக தகவல்களை JXG நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.jxg.lk இல் பெற்றுக்கொள்ள முடியும்.
































