Nov 16, 2026 - 09:58 AM

முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரதப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான சூரசம்ஹாரத் திருவிழா, இலங்கையின் பல முக்கிய ஆலயங்களிலும் நேற்று (15) பக்திபூர்வமாகவும் வெகுவிமரிசையாகவும் இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரத இறுதிநாளான நேற்று மாலை 4 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆறுமுகசுவாமி ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனைச் சம்ஹாரம் செய்யும் சூரன் போர் ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது.
இதேபோன்று, முருகப்பெருமானின் அருளைப் போற்றும் வகையில் கோப்பாய் வடகோவை ஸ்ரீ சித்திரவேலாயுத கந்தசாமி ஆலயத்திலும் கந்தசஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆன்மிகப் பேறுபெற்றனர்.
மறுபுறம், மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், சூரசம்ஹார நிகழ்வுடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் பக்தி சார்ந்த நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு அனைவரையும் ஈர்த்ததுடன், கண்கவர் வாணவேடிக்கைகளும் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.
ஆன்மிக மரபையும் தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் பறைசாற்றும் வகையில் இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது. இதேவேளை, குறித்த சூரசம்ஹார நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்திலும் மிகச் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

































