Nov 16, 2026 - 12:02 PM

சூர்யகுமார் யாதவ் தரையில் அமர்ந்து மட்டன் விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் சர்பராஸ் கானும் அமர்ந்து உணவு சாப்பிடும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் சூர்யகுமார் யாதவும், சர்பராஸ் கானும் மும்பை அணியின் சீருடையில் ஒரு சமையலறையில் தரையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உள்ளனர்.
அப்போது சூர்யகுமார், “மணிக் அண்ணன் எங்களுக்காக மட்டன் சமைக்க ஏற்பாடு செய்துள்ளார். இங்கே ஒருவர் சூடாக ரொட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு கிடைக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்பராஸ் கான், “சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்கிறது. பேசக்கூடத் தோன்றவில்லை. தொடர்ந்து சாப்பிடத்தான் ஆசையாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.
இருவரும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் இந்தக் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் தலைவராக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், தனது முதல் போட்டியிலேயே அதிரடி காட்டினார்.
கடந்த 14 ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெறும் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை விளாசினார். இதில் 15 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
அவருடன் விளையாடிய முஷீர் கான் 24 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்தார்.
களத்தில் அதிரடி காட்டி மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த சூர்யகுமார், களத்துக்கு வெளியே நண்பர்களுடன் எளிமையாக உணவு சாப்பிடும் வீடியோ மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
































