Nov 16, 2026 - 12:00 PM

மதுரையில் அமைந்துள்ள, டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் கடந்த 12ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற மாபெரும் கொள்ளைச் சம்பவத்தில், முக்கிய சந்தேகநபரான யூடியூபர் நிஷாந்த் தருமபுரி - சேத்தம்பட்டியில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கடையில் இருந்த ரூ. 21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையிடப்பட்டமை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், உடல் முழுவதும் கருப்புத் துணியைச் சுற்றிக்கொண்டு, முகமூடி மற்றும் கையுறை அணிந்து தனியாக வந்து இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டவர் யூடியூபரான 25 வயதுடைய நிஷாந்த் என்பது முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், இக்கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்தின் காதலியும் மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமுமான 23 வயதுடைய மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தையான 50 வயதுடைய சுரேஷ் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்
அதன்பின்னர், மதுரை - மாடக்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ தங்க மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த 5 நாட்களாகத் தலைமறைவாகி தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், தருமபுரி - சேத்தம்பட்டியில் பதுங்கியிருந்த சந்தேகநபர் நிஷாந்தை தனிப்படை பொலிஸார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிஷாந்தை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதுடன், தலைமறைவான முக்கிய சந்தேகநபர் சிக்கியுள்ளதால் எஞ்சிய நகைகளும் விரைவில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































