Nov 16, 2026 - 12:51 PM

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
'காவன்திஸ்ஸ' யானை மரணமடைந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில், விசேட தெரிவுக்குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு கோரி தாமும் எதிர்க்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கடந்த 23 ஆம் திகதி சபாநாயகரிடம் பிரேர்ணையொன்றை சமர்ப்பித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த கோரிக்கையை முன்வைத்து காலம் கடந்த நிலையிலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இதுவரை மூன்று முறை கூடியபோதிலும், அந்தப் பிரேரணை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த முக்கிய பிரேரணையைப் புறக்கணித்துவிட்டு, அதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பல பிரேரணைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை, காவன்திஸ்ஸ யானையின் மரணம் மற்றும் வனவிலங்குச் செல்வங்கள் தொடர்பான தேசிய முக்கியத்துவம் மற்றும் அவசரத் தேவை குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் மூலம், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனக்குரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றுவதற்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள முறையில் பங்களிப்புச் செய்வதற்கும் தேவையற்ற தடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செயற்பாடானது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயல் என்றும், பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குச் செய்யப்படும் தடையாகவும் கருதப்படுவதால், இது குறித்த முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.
எனவே, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை பற்றிய குழுவுக்கு அனுப்பி, அவசியமான மேலதிக நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் தனது கடிதத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
































