Dec 2, 2025 - 08:10 PM -
0
கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் அமைந்துள்ள சில நீர் வழங்கல் திட்டங்கள் அதிகபட்ச திறனில் இயங்காததால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சபை, நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இயங்கும் பல நீர் வழங்கல் திட்டங்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையினால் நாடு முழுவதும் 343 நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 156 நீர் வழங்கல் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள சபை, இதன் காரணமாகச் சபையினால் வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தும் பெருமளவான பாவனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் 126 திட்டங்கள் இன்று (02) காலை வேளையில் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மேலும் 30 நீர் வழங்கல் திட்டங்களை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அச்சபையின் ஓய்வுபெற்ற ஊழியர்களும் தன்னார்வமாக முன்வந்துள்ளதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், மண்சரிவு காரணமாக வீதிகள் தடைப்படுதல், நீர் குழாய்களுக்குச் சேதம் ஏற்படுதல், மின் விநியோகம் தடைப்படுதல், நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருத்தல் மற்றும் மின் மற்றும் இயந்திர உபகரணங்களுக்குச் சேதம் ஏற்படுதல் ஆகிய காரணங்களினால் நீர் வழங்கல் திட்டங்களை முழுமையாக வழமைக்குக் கொண்டுவருவதற்குச் சில நாட்கள் ஆகலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் செயற்படும் அனைத்து நீர் வழங்கல் திட்டங்களும் தற்போது அதிகபட்ச திறனுடன் இயங்கி வருவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

