Feb 5, 2026 - 10:35 AM -
0
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 07 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியின் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பங்களாதேஷ் அணி T20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து விலகியது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நிராகரித்தது. பங்களாதேஷிற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெற்றது.
இந்த விவகாரத்தில் பங்களாதேஷிற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் T20 உலகக் கிண்ணத்தில் ஆடுவோம் என்றும் தெரிவித்தது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
புறக்கணிப்பு முடிவை கைவிடாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்தது.
இந்தியாவுடன் விளையாட மறுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.சி.சி. தெரிவித்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ணம் தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது விளையாட்டு களம் அரசியல் இருக்க கூடாது என்பதால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம்.
விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் பங்களாதேஷிற்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இது மிகவும் பொருத்தமான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 15 ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப்போட்டி நடக்காமல் போனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

