Mar 1, 2026 - 08:42 AM -
0
A. Baur & Co. (Pvt.) Ltd. இன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரொல்ஃப் பிளாசர், 2025 ஆம் ஆண்டின் சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டார். Global CEO Forum இனால் இந்த உயர்ந்த கௌரவிப்பு அவரக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் சிறந்த மூலோபாய தொலைநோக்கு மற்றும் நிலைபேறான பங்களிப்பு ஆகியவற்றுக்கான பிரத்தியேகமான வியாபார தலைவர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயாதீன மற்றும் கடுமையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, முன்னணி தொழில்சார் அமைப்புகளின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்ட இந்த கௌரவிப்பானது, 2026 பெப்ரவரி 26 அன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. பிளாசர், 2018 ஒக்டோபரில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுத் துறைகளில் நிலையான வளர்ச்சியை வழிநடத்தியுள்ளார்.
அவரது வழிநடத்தலின் கீழ், சுகாதாரப் பிரிவு நான்கு ஆண்டுகளில் தனது செயற்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதுடன், சர்வதேச மருந்துவத்துறை முன்னோடிகளுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், மருந்துகள் மற்றும் நோய் இனங்காணல் பரிசோதனைகள் முதல் சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊட்டச்சத்துக்கள் வரை, சர்வதேச மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் இலங்கையின் சுகாதாரத் தேவைகளையும் இணைக்கும் ஒரு பாலமாக இப்பிரிவு தற்போது செயற்படுகின்றது. விவசாயத் துறையில், நிறுவனம் நிலையான தீர்வுகளை நோக்கித் தீர்க்கமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட உரத் தடை விவசாயத் துறைக்கு அச்சுறுத்தலாக அமைந்தபோது, Baurs நிறுவனம் சுவிட்சர்லாந்தின் FiBL மற்றும் HAFL ஆகியவற்றுடன் இணைந்து ஒரு விரிவான சிறப்பு மையத்தை நிறுவி, செயற்திறன்மிக்க மாற்றத்திற்கான வழிகளை வடிவமைக்க சர்வதேச விவசாய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டது. பயிர் விளைச்சலை அதிகரிப்பதோடு சூழல் பாதிப்பைக் குறைக்கும் நைட்ரஜன் இரட்டை நிலைப்படுத்தியான சூப்பர் யூரியா அறிமுகப்படுத்தப்பட்டமையானது, பிளாசரின் பதவிக்காலத்தை அடையாளப்படுத்தும் புத்தாக்க அடிப்படையிலான அணுகுமுறைக்குச் சான்றாகும்.
2022 ஆம் ஆண்டின் மிகவும் மதிப்பிற்குரிய பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் கௌரவம் மற்றும் 2024 டிசம்பரில் நடைபெற்ற உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமைத்துவ சிறப்பு விருதுகளில் நிறுவனத்தின் தலைமைத்துவக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கூட்டு கௌரவத்தைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிளாசரின் தலைமையின் கீழ் டிஜிட்டல் நிலைமாற்ற செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. SAP Analytics Cloud Live அறிக்கையிடலுடன் கூடிய SAP S/4 HANA எனும் cloud கட்டமைப்பை இலங்கையில் முதன்முதலில் நடைமுறைப்படுத்திய நிறுவனம் என்ற பெருமையுடன், 2023 இல் SAP நிறுவனத்தின் நிதி உருமாற்ற விருதையும் Baurs நிறுவனம் வென்றது. 2022 இல் மைக்ரோசொஃப்ட் உடனான பங்காண்மையை விரிவுபடுத்திய நிறுவனம், தனது முக்கிய தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் SAP முறைமைகளை Azure தளத்திற்கு மாற்றியது. இதன் மூலம், 800 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், cloud-first வியூகங்கள் மற்றும் தரவு அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் ஆற்றல் கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு பல்துறை வணிகக் குழுமமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளுக்கு அப்பாற்பட்டு, சுவிட்சர்லாந்தின் École hôtelière de Lausanne நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகாடமி (SHMA) ஊடாக Baurs நிறுவனம் விருந்தோம்பல் கல்வித் துறையிலும் மூலோபாய ரீதியாக விரிவடைந்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் மற்றும் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (SDC) ஆகியவற்றின் நிதியுதவியுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான திறன்கள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இது, பல தலைமுறைகளாக ஐரோப்பிய தொழிற்துறைச் சிறப்பை அடையாளப்படுத்தி வரும் சுவிஸ் தொழிற்பயிற்சி மாதிரியைப் பின்பற்றி, சுவிஸ் தொழிற் கல்வித் தரங்களை இலங்கை விருந்தோம்பல் துறை நிபுணர்களுக்கு வழங்குவதுடன், அத்துறையிலுள்ள பாரிய திறன் இடைவெளிகளையும் நிவர்த்தி செய்கின்றது.
Sony, Johnson & Johnson மற்றும் Safilo ஆகிய நிறுவனங்களில் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா எங்கும் பரந்து விரிந்த பிளாசரின் 30 ஆண்டுகால தொழில்முறை அனுபவம், சூரிச் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார இளமானிப் பட்டம் மற்றும் செயின்ட் கலென் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று MBA பட்டங்களுடன் இணைந்துள்ளது. அத்துடன், ஒரு தசாப்த கால இந்தியாவின் வர்த்தக சூழலில் அவருக்குள்ள அனுபவமும் சேர்ந்து, வெவ்வேறு கலாசாரங்களுக்கிடையிலான செயற்திறன்மிக்க மேலாண்மைத் திறனை அவருக்கு வழங்கியுள்ளது. Baurs நிறுவனத்தில் அவரது பதவிக்காலத்தின் சிறப்பம்சமாக இவை அமைந்துள்ளன.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த Alfred Baur என்பவரால் 1897 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகப் போர்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும் தனது செயற்பாடுகளைத் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு கோட்டையிலுள்ள மேல் செத்தம் வீதியில் அமைந்துள்ள அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமை அலுவலகம், அதன் 80 ஆவது ஆண்டு நிறைவையொட்டி விரிவான புனரமைப்புப் பணிகளுடன் மிளிர்கின்றது. இது, இலங்கையின் மாறிவரும் பெருநிறுவனக் சூழலில் நிறுவனத்தின் நிலையான தன்மைக்கு ஒரு சான்றாகும். விவசாயம், சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள், கைத்தொழில் தீர்வுகள், சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் தற்போது விரிவடைந்துள்ள இந்நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைகின்றது.
பெருநிறுவன சாதனைகளுக்கு அப்பால், பிளாசர் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் சபை உறுப்பினராகவும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் குழு உறுப்பினராகவும், இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் (SLID) பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் மற்றும் அந்நிறுவனத்தின் CEO மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். சர்வதேச ரீதியில், வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் பிரஜைகளுக்கான அமைப்பின் (OSA) தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக 28 நாடுகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், 'சுவிஸ் சர்க்கிள் ஸ்ரீ லங்கா' அமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார். சமூக தலைமைத்துவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு, 2026/2027 காலப்பகுதிக்கான கொழும்பு மேற்கு ரோட்டரி கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியின் ஊடாக மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
வணிக மாதிரிகள் மாறினாலும், அடிப்படைக் கொள்கைகள் மாறுவதில்லை என்பதை வலியுறுத்தும் பிளாசர் அவர்களின் இந்த கௌரவம், ஒரு கூட்டு வெற்றியின் அடையாளமாகும். இது, நம்பிக்கை, நம்பகத்தன்மை, தரம் மற்றும் புத்தாக்கம் ஆகிய தரநிலைகளைப் பேணி வரும் 800-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களின் உழைப்பைப் பிரதிபலிக்கின்றது. இந்த உயரிய பண்புகளே, நான்கு தலைமுறைகளாக இலங்கை வர்த்தகத் துறையில் Baurs என்ற பெயரை மிகச்சிறந்த தரத்திற்கு ஒரு அடையாளமாக மாற்றியுள்ளன.

