Mar 5, 2026 - 11:56 AM -
0
இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் வழங்கலில் முன்னோடியான, SLT-MOBITEL மொபைல் மற்றும் Fairfirst இன்ஷுரன்ஸ் நிறுவனம் இணைந்து, மோட்டார் வாகனக் காப்புறுதிக்கான நாட்டின் முதலாவது மொபைல் பில்லிங் (Mobile Billing) தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளன. இது நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் காப்புறுதித் துறைகளில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். இதனூடாக, SLT-MOBITEL மொபைல் பாரம்பரிய காப்புறுதி கொள்வனவு முறையை மாற்றியமைத்துள்ளதுடன், வாகன உரிமையாளர்கள் எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் தமது மொபைல் இணைப்பினூடாக நேரடியாக மோட்டார் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளவும் அதனைப் புதுப்பிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆவணங்கள் அல்லது அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தமது மொபைல் கணக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மிக எளிமையான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான முறையினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். இச்சேவையைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் https://mclick2go.fairfirst.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது மேலதிக விபரங்களுக்கு 0112 428 428 என்ற இலக்கத்தை அழைக்கலாம்.
இந்த அறிமுகத்தினூடாக, SLT-MOBITEL மொபைல் ஏற்கனவே வழங்கி வரும் ஆயுள் காப்புறுதிச் சேவைகளுக்கு மேலதிகமாக, மொபைல் ஊடாக வழங்கப்படும் காப்புறுதித் தீர்வுகளின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துகின்றது. இந்த விரிவாக்கமானது, புத்தாக்கமான மொபைல் தொழில்நுட்பத்தின் ஊடாக உள்நாட்டு வாகன உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான மற்றும் பெறுமதி மிக்க சேவைகளை அறிமுகப்படுத்துகின்றது.
இந்த முயற்சியானது, அன்றாட வாழ்வாதார சேவைகளை தனது விரிவடைந்து வரும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் ஒருங்கிணைக்கும் SLT-MOBITEL இன் தூரநோக்கிற்கு இணங்க அமைந்துள்ளது. Fairfirst காப்புறுதி நிறுவனம் தனது நம்பகமான நிபுணத்துவத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் நம்பகத்தன்மைமிக்க, மலிவான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய நிதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றது. இந்த புரட்சிகரமான அணுகுமுறையானது, தற்போதுள்ள மொபைல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கான காப்புறுதி அணுகலை விரிவுபடுத்துகிறது. இதுவரை இச்சேவைகளை அணுக முடியாத நிலையில் இருந்த மக்களுக்கும் காப்புறுதியை விஸ்தரிப்பதன் ஊடாக, அத்தியாவசியமான பாதுகாப்பானது அனைத்து இலங்கையர்களையும் ஈடிணையற்ற இலகுவான முறையில் சென்றடைவதை இச்சேவை உறுதிப்படுத்துகின்றது.
இந்தத் தீர்வு, காப்புறுதி, தொலைத்தொடர்பு மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மாற்றத்திற்கான தூரநோக்குடன் மூலோபாய ரீதியாக இணைந்துள்ளது. மேலும், இத்தகைய முன்னோடி முயற்சியானது, டிஜிட்டல் தளங்களினூடாக அத்தியாவசிய சேவைகளை வழங்குவதுடன், நாடு முழுவதிலும் பிரஜைகளின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தக் கூட்டிணைவானது ஒரு வெற்றிகரமான தொலைத்தொடர்பு–காப்புறுதி மாதிரியை சித்தரிப்பதுடன், முற்றிலும் புதிய சேவைப் பிரிவுகளை உருவாக்குவதற்கும், நிதிசார் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும், தொலைத்தொடர்பு புத்தாக்கத்தின் ஊடாகப் பாரம்பரிய காப்புறுதி நிபுணத்துவத்தை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதையும் வெளிக்காட்டுகின்றது. இந்த முன்னோடி ஆரம்பமானது, காப்புறுதி, ஆரோக்கியம், கல்வி மற்றும் ஏனைய முக்கிய துறைகளில் விரிவான டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. அத்துடன், இலங்கையர்கள் தமது அன்றாடத் தேவைகளை நிர்வகிக்கும் முறையை மாற்றியமைக்கும் வகையிலான, மொபைல் ஊடாக இயங்கும் விரிவான பொதுச் சேவை வழங்கலுக்கும் இது வழிவகுக்கின்றது.