Mar 17, 2026 - 04:54 PM -
0
இந்திய சுற்றுலாப் பபயணிகள் இலங்கைக்கு எளிதாகப் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா (City of Dreams Sri Lanka), சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Cinnamon Hotels & Resorts) மற்றும் வால்கர்ஸ் டூர்ஸ் (Walkers Tours) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அகமதாபாத் மற்றும் கொழும்பு இடையே ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனத்தின் நேரடி பயணிகள் விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இலங்கையின் முதல் தனியார் சர்வதேச விமான நிறுவனமான FitsAir, இந்த சேவையை இயக்குவதன் மூலம் அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியான இணைப்பையும், சௌகரியமான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.
FitsAir நிறுவனத்தால் இயக்கப்படும் இப்புதிய அகமதாபாத் - கொழும்பு விமானச் சேவை வாரத்திற்கு மூன்று முறை இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் முக்கிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றான குஜராத் மாநிலப் பயணிகளின் தேவைகளை இது பூர்த்தி செய்யும். வலுவான கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் அப் பிராந்தியத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை காரணமாக, இலங்கை ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக குஜராத் மக்களிடையே தொடர்ந்து ஈர்ப்பைப் பெற்று வருகின்றது. குஜராத் மாநிலத்தின் நன்கு கட்டமைக்கப்பட்ட சுற்றுலா வணிக வலையமைப்பு மற்றும் சர்வதேச சுற்றுலா அனுபவங்கள் மீதான ஆர்வம் ஆகியவை இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு அம்மாநிலத்தை ஒரு முக்கிய சந்தையாக மாற்றியுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பு இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பயணத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், கொழும்பை இந்தியப் பயணிகளுக்கான ஒரு ஈர்க்கக்கூடிய ஆடம்பர சுற்றுலாத் தலமாகவும் நிலைநிறுத்துகிறது.
கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா கொழும்பு நகரத்தை இப்பிராந்தியத்தின் பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறைக்கான ஒரு துடிப்பான மையமாக மாற்றுவதற்கான விரிவான தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாகும். இது பயணிகளை கொழும்பு நகரத்தை ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக அனுபவிக்கத் ஊக்குவிக்கிறது. இங்கு வருகை தரும் விருந்தினர்கள் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இல் அமைந்துள்ள சினமன் லைஃப் விடுதியில் தங்குவதற்கும், அல்லது கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட், சினமன் லேக்சைட் மற்றும் சினமன் ரெட் போன்ற சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் குழுமத்தின் ஏனைய விடுதிகளைத் தெரிவு செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவை நகரத்தின் அழகை ரசிக்கும் அதே வேளையில், பயணிகளுக்குத் தேவையான ஆடம்பரமான, உயர்தர மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ற தங்குமிட வசதிகளை வழங்குகின்றன.
அகமதாபாத் - கொழும்பு இடையிலான இந்த நேரடி விமான சேவையின் அறிமுகத்துடன், இந்தியப் பயணிகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சினமன் விடுமுறை சுற்றுலாப் தொகுப்புகளும் அறிமுகப்படுத்துகிறது. இத்தொகுப்புகள் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா அனுபவத்துடன் இணைந்து, தீவு முழுவதும் பல இடங்களை உள்ளடக்கிய பயண திட்டங்களை வழங்குகின்றன. இதில் கண்டி நகரில் கலாசார அனுபவங்களும், சினமன் ரிசார்ட்டுகளில் கடற்கரை தங்கும் அனுபவங்களும் அடங்குகின்றன. இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட பொழுதுபோக்கு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு, பயணிகளுக்கு ஒரு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதே இந்த சலுகைகளின் பிரதான நோக்கமாகும்.
இதுதொடர்பில் சினமன் ஹோட்டல்ஸ் ரிசார்ட்ஸின் கொழும்பு ஹோட்டல் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரும், பொது முகாமையாளருமான கமல் முனசிங்க கூறுகையில், “எமது மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகின்றது. குறிப்பாக, கொழும்பு நகரை ஒரு பொழுதுபோக்குச் சுற்றுலாத் தலமாக தெரிவு செய்வதில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சிறப்பு விமான சேவைகள், பயணிகள் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் உற்சாகம், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவிப்பதற்கான ஒரு தடையற்ற நுழைவாயிலாக அமையும். அதேவேளை, இது நாடு முழுவதுமான சினமன் நிறுவனத்தின் பிரத்தியேக சுற்றுலா அனுபவங்களை பயணிகள் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.” என்றார்.
இது குறித்து FitsAir நிறுவனத்தின் பணிப்பாளர் அம்மார் காசிம் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவின் மிகத் துடிப்பான வணிக மையங்களில் ஒன்றாக அகமதாபாத் திகழ்கின்றது. எமது விமான சேவை வலையமைப்பிற்குள் நீண்டகாலமாக இணைத்துக்கொள்ள நாம் விரும்பிய ஒரு நகரமாக இது காணப்பட்டது. கொழும்பிலிருந்து புறப்படும் எமது இரவு நேர விமானம் அதிகாலையிலேயே அகமதாபாத்தைச் சென்றடைவதால், பயணிகள் அன்றைய முழு நாளையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும். அத்துடன், இது கொழும்பு ஊடாக எமது விரிவடைந்து வரும் சர்வதேச விமான வலையமைப்பிற்கு தடையற்ற மற்றும் இலகுவான மேலதிக இணைப்புகளையும் வழங்குகின்றது.” என்றார்.
அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையிலான இந்த விமான சேவைகள் தற்போது வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படுகின்றன. சினமன் நிறுவனத்தினால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயணப் பொதிகளுக்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபா 55,555/- (INR 55,555/-) முதல் ஆரம்பமாகும் இந்தப் பொதியில், இரு வழி விமானக் கட்டணங்கள் (Return air fare), சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் சினமன் லைஃப் விடுதியில் காலை உணவுடன் கூடிய இரண்டு இரவு தங்குமிட வசதிகள் மற்றும் விமான நிலையத்திலிருந்து தங்குமிடம் வரையான தனியார் போக்குவரத்து சேவை வசதிகள் ஆகிய அனைத்தும் உள்ளடங்குகின்றன.
