Header Logo

வணிகம்
இலங்கையில் உள்ளடங்கலான பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்காக அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும் இணைந்து சமூக கலந்துரையாடலை வலுப்படுத்துகின்றன

Mar 18, 2026 - 12:06 PM -

0

இலங்கையில் உள்ளடங்கலான பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்காக அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும் இணைந்து சமூக கலந்துரையாடலை வலுப்படுத்துகின்றன

இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புகளுடன் முன்னோக்கிச் செல்லும் நிலையில், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்றுள்ளது.கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையெனில், பணியாளர்கள் மத்தியிலான நிச்சயமற்ற தன்மை விரைவாக அமைதியின்மையாகவும் இடையூறுகளாகவும் மாறி, பணியாளர்களையும் பரந்துபட்ட மக்களையும் பாதிக்கக்கூடும். இவ்வாறான சவால்களை எதிர்கொள்வது அரசதுறை மாற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு மிக அவசியமாகும். இம்முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சமாதானம் மற்றும் நெருக்கடித் தடுப்பிற்கான சமூக கலந்துரையாடல் (Social Dialogue for Peace and Crisis Prevention) திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த ஐக்கிய நாடுகளின் கூட்டு முயற்சி அமைந்துள்ளது. இது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO), ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களிலும், அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலும் சமூக கலந்துரையாடல் மற்றும் பிணக்குத் தீர்வு பொறிமுறைகள் ஊடாக அமைதியான, உள்ளடங்கலான மற்றும் நீதியான தீர்வுகளை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசதுறைகளில் பணியிட மன்றங்களை (Workplace forums) நிறுவுவது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த மன்றங்கள் நிர்வாகத்தையும் பணியாளர்களையும் ஒன்றிணைத்து, பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, தடுத்து, தீர்ப்பதற்கு உதவுகின்றன. இது ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஊக்குவிப்பதுடன், மோதல்கள் தீவிரமடைவதைக் குறைத்து, இறுதியாக அரச சேவை வழங்கலை மேம்படுத்துகிறது. 

இது குறித்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். அலோகபண்டார கருத்துத் தெரிவிக்கையில், “இந்தக் கலந்துரையாடல் பொறிமுறைகள் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இடையூறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் உதவுவதுடன், மக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் வகையில் அரச சேவையை மாற்றுவதற்கும் ஆதரவளிக்கின்றன” என்றார். 

“சமூக கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் அதிக திறன் கொண்டவையாகவும், வினைத்திறன் மிக்கவையாகவும், பொதுமக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கக்கூடியவையாகவும் காணப்படுகின்றன. இது மீட்சிக்கும் நிலைத்தன்மைக்கும் மிக முக்கியமானது” என தொழில் அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார். 

இத்திட்டத்தின் தாக்கம் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. சம்பள முரண்பாடுகள் மற்றும் பதவி உயர்வு செயல்முறைகள் முதல் பணியிட பாதுகாப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் வரை, பிரச்சினைகள் மோதல்களாக மாறுவதற்கு முன்னரே அவற்றைச் சரிசெய்ய இந்த பணியிட மன்றங்கள் உதவுகின்றன. மேலும், நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான களமாகவும் இவை அமைந்துள்ளன. 

தனியார் துறையில், இலங்கையின் முதலாளிமார் சம்மேளனத்துடனான ஒத்துழைப்பானது குறை தீர்க்கும் முறைகளை வலுப்படுத்தியுள்ளது. இது பணியிட உறவுகளை மேம்படுத்துவதோடு, பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான செயல்முறைகளை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் இதுவரை 8,000க்கும் அதிகமான பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். 

சமூக மட்டத்தில், முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் பெண்கள, இளைஞர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் போன்ற குழுக்களுக்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. சமூகங்களிடையே நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் மன்றங்களுக்கு (local forums) உதவும் வகையில், சமூக உறுப்பினர்களுக்கு மோதல் தீர்வு மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாரம் நடைபெற்ற மூன்றாவது வழிநடத்தல் குழு (project steering committee) கூட்டத்தில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அனைத்துப் பணிகளிலும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில், பதற்றங்களைத் தடுக்கவும், நம்பிக்கையை கட்டியெழுப்பவும், இலங்கை மக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தவும் சமூக கலந்துரையாடல் இன்றியமையாததாகும். சமாதானம் மற்றும் நெருக்கடித் தடுப்பிற்கான சமூக கலந்துரையாடல் ' திட்டமானது, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நிதி மற்றும் கூட்டு SDG நிதி ஆகியவற்றின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகள் இலங்கை SDG நிதியத்தினால் நிதியளிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title