Mar 18, 2026 - 05:10 PM -
0
செலான் வங்கி பிஎல்சி, அரசாங்க நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் செலான் அதஹித கடன் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இத் திட்டம், தேசிய பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களை (MSME) மீண்டும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடன் திட்டமாகும்.
நிதி அமைச்சின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டம், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் செயல்படும் தகுதி வாய்ந்த MSMEகளுக்கு நிதியுதவியை அணுகக்கூடியதாகவும் எளிதாகவும் வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில், 90 கடன்களை உள்ளடக்கியதாக மொத்தம் ரூ.1.2 பில்லியன் நிதி செலான் வங்கிக்கு ஒதுக்கப்பட்டது. வணிகங்களின் செயல்திறன் அடிப்படையில் இந்த நிதி மூன்று கட்டங்களாக தலா ரூ.400 மில்லியன் வீதம் வெளியிடப்பட்டது.
செலான் வங்கி மூன்று கட்டங்களிலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், முழுக் கடன் வழங்கல் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இது வங்கியின் வலுவான செயல்பாட்டுத் திறன்களை மட்டுமல்லாமல் பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் MSMEகளை ஆதரிப்பதில் அதன் தொடர்ச்சியான கவனத்தையும் பிரதிபலிக்கின்றது. 2025 இலக்குகளை எதிர்பார்ப்புகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றியதன் விளைவாக 2026ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக செலான் வங்கி ஏற்கனவே ரூ.1 பில்லியன் ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. இது நாடெங்கிலும் உள்ள தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதற்கான அதன் திறனை மேலும் வலுப்படுத்துகிறது.
செலான் அதஹித கடன் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 5% எனும் சலுகை வட்டி வீதத்தில் ரூ.25 மில்லியன் வரை நிதியுதவியைப் பெறலாம். இது முன்னைய ஆண்டின் 7% வட்டி வீதத்திலிருந்து குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கடன்கள் தொழிற்பாட்டு மூலதனத் தேவைகளையும் நீண்டகால முதலீட்டு தேவைகளையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொழிற்பாட்டு மூலதனக் கடன்கள் மூன்று ஆண்டுகள் வரையான கால அவகாசத்துடன் வழங்கப்படுகின்றன. மொத்த கடன் தொகையில் 40% வரை தொழிற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு ஒதுக்கி மீதமுள்ள தொகையை முதலீட்டு நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம். முதலீடு மற்றும் கட்டுமானம் தொடர்பான பணிகளுக்கான கடன்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு ஆண்டு சலுகை காலத்துடன், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை கால அவகாசத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தில் பிரத்தியேக கடன் உத்தரவாத பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையிலான தகுதிவாய்ந்த வணிகங்கள் 80% கடன் உத்தரவாத காப்பீட்டிலிருந்து பயனடையலாம். மேலும் 0.5% முதல் 1.25% வரை குறைக்கப்பட்ட ஆபத்து பிரீமியமும் அடங்கும். இத் திட்டத்தின் கீழ் தகுதி பெற, நிறுவனங்கள் குறிப்பிட்ட உரிமை மற்றும் நிர்வாக அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வணிகத்தின் பெரும்பான்மையான உரிமைத்துவம் பெண்களிடம் இருப்பது அல்லது உரிமைத்துவம், முகாமைத்துவம் மற்றும் நிர்வாக மட்டங்களில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இருப்பது ஆகியவை அடங்கும். வர்த்தகம், லீசிங் மற்றும் வாடகை நடவடிக்கைகளில் ஈடுபடும் வணிகங்கள் இத் திட்டத்தின் கீழ் தகுதி பெறாது.
செலான் அதஹித கடன் திட்டம், பொருளாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் தகுதிவாய்ந்த உற்பத்தி, கட்டுமானம், ஏற்றுமதி சார்ந்த தொழில்கள், சுற்றுலா, ஆடை, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட துறைகளை ஆதரிக்கிறது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கும் இத்திட்டம் முன்னுரிமை வழங்குகிறது.
செலான் அதஹித கடன் திட்டத்தின் ஊடாக செலான் வங்கி, MSMEகளுக்கு நியாயமான நிதி அணுகல் தெரிவுகளை வழங்குவதுடன் பெண்கள் தலைமையிலான தொழில்களையும் ஆதரிக்கின்றது. இது இலங்கையில் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதில் வங்கியின் உறுதிப்பாட்டை தொடர்ந்து நிரூபிக்கின்றது.
