May 27, 2026 - 10:07 AM -
0
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக டெல்லிக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் தமிழக முதலமைச்சர் விஜய், இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடியின் அலுவலகமான சேவா தீர்த் பவனில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி விவகாரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, மாலை 6.45 மணிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இரவு 7.30 மணிக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார்.
இதையடுத்து நாளை (28) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.

