Header Logo

இந்தியா
அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்தது!

May 27, 2026 - 04:35 PM -

0

அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்தது!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதையடுத்து அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. 

அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எங்களிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தாங்கள் நியமித்தவரைதான் அ.தி.மு.க. கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் மனு கொடுத்தவர்கள் 15 நாட்களுக்குள் சமரசமாகி மனுவை வாபஸ் பெறவும் அவகாசம் உள்ளது. 

அதன் அடிப்படையில் இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை (28) வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் அந்த மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். 

இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் கடந்த 2 நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த 4 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர். 

இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி, தரப்பினர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாக முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று (26) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்குரிய இடத்தில் மற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்டது. எனவே அவர்களிடம் இருந்து மீண்டும் பதவியை பறிக்க முடியாது. 

பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதம் கழித்து வேறு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். 

இப்போதைக்கு கட்சி பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எம்.எல்.ஏ. பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் அவர்கள் சமரசமாக செல்ல முடிவு செய்தனர். 

இந்த நிலையில் சென்னை, பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலத்தில் இன்று (27) காலை எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினார்கள். எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர், டாக்டர் சி.விஜய பாஸ்கர், கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் லீமா ரோஸ், அருள்மொழித்தேவன், ரவி மனோகரன், சேகர், திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஆலோசனை கூட்டத்துக்கு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த கே.சி.வீரமணி எம்.எல்.ஏ. கூறியதாவது, 

அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவரும் ஒன்றாகி விட்டோம். இப்போது எல்லோருமே ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் தாய் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த லீமா ரோஸ் எம்.எல்.ஏ. கூறும் போது, ‘இரு அணிகளும் இணைப்பு உறுதியாகிவிட்டது’ என்று தெரிவித்தார். 

இன்று காலை 10 மணிக்கு சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 12.15 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. 

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். 

பின்னர் அவர்கள் அ.தி.மு.க.வில் ஒரே அணியாக இணைந்தனர். எஸ்.பி. வேலுமணியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, கே.சி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் லீமாரோஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 13 பேர் சென்றனர். 

சி.வி.சண்முகம், சி.விஜய பாஸ்கர், அருண்மொழி தேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வரவில்லை. அ.தி.மு.க.வில் இணைக்க மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சி.வி.சண்முகம் கோபத்தில் இருப்பதாகவும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, சட்டமன்ற குழு தலைவர், கொறடா தொடர்பாக இரு தரப்பினர் அளித்த மனுக்களை சபாநாயகரை சந்தித்து அ.தி.மு.க.வினர் திரும்பப்பெற்றனர். மேலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த மனுக்களும் சபாநாயகரிடம் இருந்து வாபஸ் பெறப்பட்டது. இரு அணிகள் இணைப்பால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. 

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அ. தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title