Aug 10, 2026 - 01:11 PM

கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை கல்வி எதிர்காலத்திற்கு முக்கியமான ஒரு பரீட்சையாக கருதப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் மூலம் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக கல்வி அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கடமைகளுக்காக பங்குபற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் அடிப்படையில் கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரிட்சையில் கடமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அவர்களது பொறுப்பு மற்றும் தற்போதைய செலவுகளை கருத்தில் கொண்டு போதுமான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.













