Aug 12, 2026 - 05:51 PM

யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு விசேட நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று (11) தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்குள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே, வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக அதிகாரிகளும் தற்காப்பிற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்லகல இடதுகரை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரு மான்களின் 41 கிலோகிராம் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளின் போது, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் உள்ள பூங்காவிற்குள் வனவிலங்கு அதிகாரிகள் காத்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, காயமடைந்த நபர் ஒருவர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் லுணுகம்வெஹெர பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது முதுகுப் பகுதியிலும், வலது தோள்பட்டைக்கு கீழ் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கால்நடை வளர்ப்பாளர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் லுணுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து பரந்த அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

















