Aug 14, 2026 - 11:47 AM

வடகிழக்கு மக்களின் காணி உரிமை, மனித உரிமை மற்றும் வாழ்வாதார மீட்சிப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை ஆகிய பகுதிகளில், தங்களின் பூர்வீக காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும் மீட்டுத்தரக் கோரி 1,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்குச் சமூக ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில் இப்போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்,
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பூர்வீகக் காணிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நாட்டின் தேசிய வருமானத்திற்கும் கிராமிய பொருளாதாரத்திற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கி வரும் இம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும்.
புதிய அரசின் கவனத்திற்கு: முந்தைய அரசாங்கங்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றியது போலன்றி, தற்போதைய புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் விரைந்து தலையிட்டு, காணிகளை மீள ஒப்படைத்து நியாயமான தீர்வினை வழங்க வேண்டும்.
இப்போராட்டத்தில் மன்னார் (முள்ளிக்குளம், சிலாபத்துறை, பள்ளிமுனை, சன்னார்), யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் நிலங்களை இழந்து தவிக்கும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
மேலும், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்த பின்னர் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.























