Aug 25, 2026 - 05:09 PM





இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்தப் பரீட்சைக்காக இன்று (25) முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் மாகாண அரச சேவையின் ஆசிரியர் சேவையில் 2 ஆம் வகுப்பின் I ஆம் தரத்திற்குத் (Grade 2-I) தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
அத்துடன், தரம் 2-I க்கு தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்திருந்தபோதிலும், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் I ஆம் தரத்திற்குத் தரம் உயர்வு பெறும் ஆசிரியர்களும் அத்தரம் உயர்விற்காக III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பரீட்சைக்குரிய சுய கற்றல் தொகுதிகளின் (Self-study modules) பாடத்திட்டம் கல்வி அமைச்சின் e-Thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சார்த்திகள் அப்பாட விடயங்களைக் கற்று பரீட்சைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.























