Aug 28, 2026 - 11:52 PM





பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தானே நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாகவும், இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைகளின் போது வெளிநாடுகள் உதவி வழங்க முன்வருவது இயல்பானது என்றபோதிலும், நேபாள பாதுகாப்புப் படையினர் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது அத்தகைய வெளிநாட்டு உதவிகள் தேவைப்படவில்லை என்று அவர் மேலும் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இலங்கை, இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமது தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புவதற்கான அனுமதியைக் கோரியிருந்ததாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட சீனா எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா (Rasuwa) மாவட்டம் உட்பட ஏனைய பகுதிகளில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களில் தென்கொரிய நாட்டவர்களும் அடங்குவதால், தென்கொரியா ஏற்கனவே அவசர கால நடவடிக்கைக் குழுவொன்றை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளதுடன், மேலும் ஒரு நிவாரணக் குழுவை அனுப்புவதற்கும் தயார் நிலையில் உள்ளது.
வெளிநாட்டு மீட்புக் குழுக்களை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயார் இல்லை என நேபாளம் அறிவித்துள்ளபோதிலும், தமது மீட்புக் குழுக்களைச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக நேபாள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.























